கெம்பாபுரா-ஜே.பி.நகர் இடையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அரசு அனுமதி


கெம்பாபுரா-ஜே.பி.நகர் இடையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அரசு அனுமதி
x

பெங்களூருவில் ரூ.16 ஆயிரம் கோடியில் 32 கிலோ தூரத்திலான கெம்பாபுரா-ஜே.பி.நகர் இடையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு:

3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்று, தற்போது 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவற்றில் பெரும்பாலான பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெற உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது கெம்பாபுராவில் இருந்து ஜே.பி.நகர் 4-வது ஸ்டேஜ் மற்றும் ஒசஹள்ளியில் இருந்து கடபகரே வரையிலான 3-வது மெட்ரோ ரெயில் திட்டமாகும். ஒட்டுமொத்தமாக 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

ரூ.16 ஆயிரம் கோடி

32 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நகர வளர்ச்சித்துறை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை ரூ.16 ஆயிரம் கோடியில் முடிக்கவும் அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு, நகர வளர்ச்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசு அனுமதி அளித்ததும், இந்த திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் முடிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. பெங்களூருவில் 1-வது மற்றும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவு பெற வருகிற 2030-ம் ஆண்டு ஆகலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story