எல்லாவற்றையும் விற்கும் 'வெறித்தன அவசரத்தில்' மத்திய அரசு இல்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
எல்லாவற்றையும் விற்கும் ‘வெறித்தன அவசரத்தில்’ மத்திய அரசு இல்லை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லி,
ஜி20 மாநாட்டிற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து வருகின்றனர். அந்தந்த நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் இந்திய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரைசினா பேச்சுவார்த்தை என்ற தலைப்பில் டெல்லியில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாட்டின் 4 முக்கியமான துறைகளின் நிறுவனங்களை அரசு இயக்கவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் கொள்கைகள் அடிப்படையில் 4 முக்கிய துறைகளாக அணு சக்தி - வான் மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புதுறை, மின்சாரம் பெட்ரோலியம் நிலக்கரி மற்றும் இதர கனிமங்கள் மற்றும் வங்கி காப்பீடு நிதி சேவைகள் ஆகிய 4 துறைகள் மிகவும் முக்கியமாகும்.
எல்லாவற்றையும் விற்கும் 'வெறித்தன அவசரத்தில்' மத்திய அரசு இல்லை. அதேவேளை, குண்டூசி முதல் விவசாயம் வரை அனைத்து பொருட்களையும் அரசு உற்பத்தி செய்ய்ம் என்று கூறவில்லை. ஆகையால், அரசு செல்ல தேவையில்லாத துறைகளில் அரசு செல்லாது. ஆனால், தேவையான துறைகளான தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்டவற்றை அரசு தன் வசம் வைத்திருக்கும்' என்றார்.