கனியாமூர் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு
கலவரம் நடந்த கனியாமூர் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி, மரண சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதித்து உள்ளனர். இது மாணவர்கள் - பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளதாகவும், அதற்காக பள்ளிகளை அரசு ஏற்க வேண்டும் என கோர முடியுமா? என வினவியதுடன், மனுவில் எந்த தகுதியும் இல்லை, நியாயமான காரணம் ஏதும் இல்லை எனவும் கூறி, தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.