மத்திய அரசின் வரி வருவாய் 2021-22 நிதியாண்டில் 34 சதவீதம் உயர்வு!
அரசின் வருவாய் நேரடி வரிகளில் 49 சதவீதமும் மற்றும் மறைமுக வரிகளில் 20 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் வரி வருவாய் 34 சதவீதம் உயர்ந்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட தற்காலிக தரவுகளின்படி, அரசின் வருவாய் சேகரிப்பு நேரடி வரிகளில் 49 சதவீதமும் மற்றும் மறைமுக வரிகளில் 20 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
2021-22 நிதியாண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 34 சதவீதம் உயர்ந்து ரூ.27.07 லட்சம் கோடியாக இருந்தது. பட்ஜெட்டில் கணித்ததை விட இது சுமார் ரூ.5 லட்சம் கோடி அதிகமாகும்.
இதன்மூலம், கடந்த ஆண்டு பொருளாதாரத்தின் விரைவான மீட்சியையும், திறமையான வரி நிர்வாகத்தையும் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.14.10 லட்சம் கோடியாகவும், மறைமுக வரியாக ரூ.12.90 லட்சம் கோடியாகவும் இருந்தது.
வரி வருவாயின் அதிகரிப்பு 2021-22 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வரி மற்றும் ஜிடிபி விகிதத்தை 11.7 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளது.