பல்லாரி தம்பதியிடம் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்பு; இடைத்தரகர்கள் 2 பேர் கைது
மது அருந்த பணம் இல்லாததால் குழந்தையை தாத்தா விற்பனை செய்தார். பல்லாரியை சேர்ந்த தம்பதியிடம் இருந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மேலும் இடைத்தரகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கமகளூரு;
பச்சிளம் குழந்தை விற்பனை
தாவணகெரே டவுன் கேசவமூர்த்தி படாவனே பகுதியை சேர்ந்தவர் பசவண்ணா (வயது 65). இவரது மகள் சுஜாதா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுஜாதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், பசவண்ணா மது அருந்த பணம் இல்லாததால் தனது மகளின் குழந்தையான பேத்தியை ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு, குழந்தை இறந்ததாக நாடகமாடினார். இதையடுத்து போலீசார் பசவண்ணாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது இடைத்தரகர்கள் மூலம் குழந்தையை விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மீட்பு
இதையடுத்து தாவணகெரே போலீசார், பசவண்ணா கொடுத்த தகவலின்பேரில் இடைத்தரகர்களாக செயல்பட்ட அதேப்பகுதியை சேர்ந்த பரமேஷ், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதன்பின்னர், குழந்தையை யாரிடம் விற்றார்கள் என்பது குறித்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பல்லாரி மாவட்டம் அரப்பனஹள்ளியை சேர்ந்த ஆலப்பா-பீமவ்வா தம்பதியிடம் பெண் குழந்தையை விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஆலப்பா-பீமவ்வா தம்பதியிடம் இருந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்டனர். மேலும் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாயிடம் ஒப்படைப்பு
பின்னர் போலீசார், மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தைக்கு முத்த மழை பொழிந்த சுஜாதா, போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.