போலீஸ் கெடுபிடியால் மணமகன், மணமகள் பரிதவிப்பு

பிரதமர் மோடி ஊர்வலம் காரணமாக போலீஸ் கெடுபிடியால் மணமகன், மணமகள் பரிதவித்தனர். பின்னர் போலீசாரிடம் கெஞ்சியதால் தீவிர சோதனைக்கு பிறகு திருமண மண்டபங்களுக்கு சென்றனர்.
பெங்களூரு:-
காரை தடுத்து நிறுத்தினார்கள்
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று பிரதமர் மோடி கர்நாடகம் வருகை தந்திருந்தார். பெங்களூரு மாகடி ரோடு, நைஸ் ரோடு ஜங்ஷனில் இருந்து சும்மனஹள்ளி வரை 5.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். இதற்காக நைஸ் ரோடு ஜங்ஷனில் இருந்து சும்மனஹள்ளி வரையும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் நேற்று மதியத்தில் இருந்தே நைஸ் ரோடு ஜங்ஷனில் இருந்து சும்மனஹள்ளி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று சாலைகளில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி அறியாமல் திருமண வரவேற்பில் பங்கேற்பதற்காக ஒரு மணமகன் சுங்கதகட்டே பகுதிக்கு உறவினர்களுடன் காரில் வந்தார். அந்த காரை போலீசார் வழிமறித்தனர்.
மணமகன் கெஞ்சல்
மேலும் அந்த சாலை வழியாக கார் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. பின்னர் காருக்குள் இருந்து மணமகன் மண கோலத்தில் கீழே இறங்கி வந்து திருமண மண்டபத்திற்கு வரவேற்புக்காக செல்வதாகவும், நல்ல நேரம் முடியும் முன்பாக மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கும்படியும் போலீசாரிடம் மணமகனும், உறவினர்களும் கெஞ்சினார்கள். இதையடுத்து, அந்த காரையும், மணமகன் உள்ளிட்ட உறவினர்களையும் முழுமையாக சோதனை நடத்திவிட்டு, அங்கிருந்து செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்கினார்கள்.
அதுபோல், மாகடி ரோடு அருகே வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால், ஒரு மணமகள் திருமண மண்டபத்திற்கு உறவினருடன் ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார். இதற்கும் போலீசார் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் போலீசாரிடம் நீண்ட நேரம் கெஞ்சிய பிறகு, போலீசார் அனுமதித்தனர்.
மணமகள் அணிந்திருந்த மாலை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சோதனை செய்த பிறகு மண்டபத்திற்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். பிரதமர் மோடி ஊர்வலத்தால் மணமகன், மணமகள் மண்டபத்திற்கு செல்ல பரிதவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர்.






