ஜி.எஸ்.டி. விலக்கு கோரி விவசாயிகள் பேரணி - டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடத்துகிறது


ஜி.எஸ்.டி. விலக்கு கோரி விவசாயிகள் பேரணி - டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடத்துகிறது
x

கோப்புப்படம்

வேளாண் உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. விலக்கு கோரி விவசாயிகள் பேரணி டெல்லியில் வரும் டிசம்பர் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

வேளாண் உபகரணங்கள் மற்றும் உரத்துக்கான ஜி.எஸ்.டி.யை நீக்கக்கோரியும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகையை அதிகரிக்க வலியுறுத்தியும் டெல்லியில் வருகிற டிசம்பர் 19-ந் தேதி பேரணி நடத்த பாரதிய கிசான் சங்கம் என்ற விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற இந்த சங்கத்தின் அகில இந்திய செயலாளர் சாய் ரெட்டி இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டெல்லியில் நடந்த சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளின் நிதி நிலவரம் மோசமடைந்து வருவதாக கவலை தெரிவித்த அவர், இதை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினைகள் மற்றும் பேரணி தொடர்பாக மக்களிடம் விளக்குவதற்காக இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் பேரணியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என சங்கத்தின் பொதுச்செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.


Next Story