'ஜி.எஸ்.டி. உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதா?' மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு


ஜி.எஸ்.டி. உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதா? மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு
x

நிதி மந்திரி வரலாறு பற்றி பேசுகிறாரே தவிர, பொருளாதாரத்தைப் பற்றி பேசவில்லை. ஒருவேளை அவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். நிதி மந்திரியாக இருக்க முடியாது.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரமும் கைது ஆனார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசுக்கு செவியே கிடையாது. செவி இருந்தால்தானே செவி சாய்க்க முடியும். மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதையே அரசு மறுக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு மக்களவையில் பேசிய நிதி மந்திரி, 'ஜி.எஸ்.டி. வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை' என்கிறார். இப்படி சொல்வதைப் பார்த்தால் அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. மக்கள் பாதிக்கப்படவில்லையா?

நிதி மந்திரி வரலாறு பற்றி பேசுகிறாரே தவிர, பொருளாதாரத்தைப் பற்றி பேசவில்லை. ஒருவேளை அவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். நிதி மந்திரியாக இருக்க முடியாது.

நடைமுறையில் மக்கள் நாள்தோறும் பாதிக்கப்படுகிறார்கள். மக்களிடையே சேமிப்பு குறைந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருக்கிறது. மக்களின் நுகர்வு குறைந்து இருக்கிறது. பெண்கள் மத்தியில் ரத்தசோகை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் 37 சதவீதம் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு மக்கள் பாதிக்கப்படவில்லை என்று சொன்னால் என்ன செய்வது? நாங்கள் போராடத்தான் வேண்டும். போராட்டத்தின் குரலை ஒடுக்க முடியாது. போராட்டத்தின் உணர்வுகளை மங்கச்செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story