'மன் கி பாத்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - ஆண் குழந்தை பிறந்தது...!


மன் கி பாத் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - ஆண் குழந்தை பிறந்தது...!
x

உத்தரபிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி மன் கி பாத் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள டெல்லி சென்றார்.

டெல்லி,

பிரதமர் மோடி 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதுவரை 99 உரைகள் முடிந்துள்ளன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 'மன் கி பாத்'தின் 100-வது உரை ஒலிபரப்பப்பட உள்ளது.

இதனிடையே, 'மன் கி பாத்'தின் 100வது நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட உள்ள நிலையில் இதை கொண்டாடும் வகையில் டெல்லியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த மன் கி பாத் உரைகளில் பிரதமர் மோடி பாராட்டிய சமுதாயத்திற்கு பெரும் பங்களிப்பு அளித்த பெண்களில் 100 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் தொடங்கி வைக்கிறார். உள்துறை மந்திரி அமித்ஷா, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளும் 100 பெண்களில் உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரியை சேர்ந்த பூனம் தேவியும் ஒருவர் ஆவார். சுய உதவி குழு மூலம் வாழைத்தண்டு மூலம் கைப்பை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து கூடுதல் வருமானம் ஈட்டு பூனம் தேவியை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான பூனம் தேவி மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறும் விக்யா பவன் அரங்கிற்கு வந்த போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள ராம் மனோகர் லொகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பூனம் தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story