ரூ.3 லட்சம் கோடிக்கான குஜராத் பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை
குஜராத் சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி கானு தேசாய் நேற்று தாக்கல் செய்தார்.
காந்திநகர்,
குஜராத் சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி கானு தேசாய் நேற்று தாக்கல் செய்தார். புதிய அரசின் இந்த முதல் பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லாததால் வரவேற்பு பெற்று உள்ளது.
ரூ.3.01 லட்சம் கோடிக்கான இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அந்தவகையில் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 கியாஸ் சிலிண்டர் இலவசம், ஜன ஆரோக்கிய திட்ட நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பட்ஜெட்டில் முந்தைய ஆண்டை விட 23.38 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதி மந்திரி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ரூ.42 லட்சத்துக்கு அப்பால் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்கட்டமைப்புக்காக ரூ.5 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டு இருப்பதாகவும், 5 மாநில நெடுஞ்சாலைகள் ரூ.1,500 கோடியில் அதிவிரைவு மண்டலங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும் கானு தேசாய் கூறினார்.