குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை - காங்கிரஸ் கருத்து
குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
ஆமதாபாத்,
குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தகோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்பட எல்லாவற்றையும் காங்கிரஸ் சரியாகச் செய்திருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்க இல்லை என தெரிகிறது' என தெரிவித்தார்.
குஜராத்தில் புதிய அரசை அமைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வு காணும் என நம்புவதாகவும் கூறினார்.
இதற்கிடையே குஜராத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ரகு சர்மா ராஜினாமா செய்து உள்ளார்.