குஜராத் தேர்தல்: ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக வாக்களித்த ஒரு கூட்டு குடும்பம்


குஜராத் தேர்தல்: ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக வாக்களித்த ஒரு கூட்டு குடும்பம்
x

தேர்தலை விடவும் பரபரப்பாக பேசப்படும் வகையில், குஜராத்தின் சூரத் நகரில் வசிக்கும் ஒரு குடும்பம், சப்தமில்லாமல் வாழ்ந்து வருகிறது.

சூரத்

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.காலை எட்டு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இன்று காலை முதல் வாக்குச்சாவடிகளில் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேர்தலை விடவும் பரபரப்பாக பேசப்படும் வகையில், குஜராத்தின் சூரத் நகரில் வசிக்கும் ஒரு குடும்பம், சப்தமில்லாமல் வாழ்ந்து வருகிறது.

சகோதரர்களுக்குள் சண்டை, தந்தை - மகன் இடையே தகராறு என்று சென்றுகொண்டிருக்கும் காலத்தில், இங்கே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையிலும், எதிர்காலத் தலைமுறையினருக்கு புரிய வைக்கும் வகையிலும் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாகச் சேர்ந்து சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் இந்த சோலங்கி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும், தேர்தலில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

இங்கு மூத்த குடிமகனாக 82 வயது ஷாம்ஜிபாய். முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் பார்த் மற்றும் வேதாந்த் இரண்டு பேர் உள்ளனர். நவாகாம் வாக்குச்சாவடிகளுக்கு பல்வேறு வாகனங்களில் சென்று இவர்கள் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர். 81 பேர் கொண்ட இந்தக் குடும்பத்தில் 60 பேர் வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள்.

குடும்பத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதத்தில் ஆர்வத்துடன் வாக்களிப்பதில் கூட்டாக பங்கேற்கிறோம். மற்றவர்களையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தவே, அனைவரும் ஒன்றாகச் சென்று வாக்களிக்கிறோம் " என்று 17 சகோதரர்களில் ஒருவரான கன்ஷியாம் கூறினார்.

இன்னும் சொல்லப் போனால், இந்தக் குடும்பத்தில் மொத்தம் 96 பேராம். இவர்களில் 15 பேர் கிராமத்தில் வசிக்கிறார்களாம். 81 பேர் பணிநிமித்தமாக காம்ரேஜ் பகுதியில் வசிக்கிறார்கள்.


Next Story