ஞானவாபி வழக்கு.. மசூதி கமிட்டியின் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்டு


ஞானவாபி வழக்கு..  மசூதி கமிட்டியின் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்டு
x

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அலகாபாத்:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மசூதி இருக்கும் இடம் கோவிலின் ஒரு பகுதி என்று இந்துக்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்து பெண்கள் கடந்த 2021ம் ஆண்டு வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தின் மண்டபத்தில் உள்ள இந்து தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர். மேலும் பள்ளிவாசலில் உள்ள இந்து தெய்வச் சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி வாரணாசி நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. அதாவது, ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதையும் வீடியோ எடுத்து தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், வாரணாசி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து, ஞானவாபி மசூதி கமிட்டி மற்றும் உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளையும் அலகாபாத் ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


Next Story