அரியானா மாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க. வெற்றி


அரியானா மாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க. வெற்றி
x

கோப்புப்படம்

பா.ஜ.க. வேட்பாளர் மற்றும் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெங்களூரு,

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு 10-ந்தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் குபேந்திரரெட்டி ஆகியோரும் போட்டியிட்டனர்.

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 122 உறுப்பினர்கள், காங்கிரசுக்கு 70 பேர், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 32 பேர் உள்ளனர்.

ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. 4-வது இடத்திற்கு 3 கட்சிகளிடமும் போதுமான எண்ணிக்கையில் வாக்குகள் இல்லை. இதையடுத்து பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) என மூன்று கட்சிகளும் தங்கள் வேட்பாளரை நிறுத்தின.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. திட்டமிட்டப்படி ஓட்டு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு தொடங்கியது.

இதில் பா.ஜனதா வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதேபோல் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது.

மராட்டியம், அரியானா

மராட்டியத்தில் 6 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம், பா.ஜ.க.வுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6-வது இடத்தை பெறுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே பலப்பரீட்சை ஏற்பட்டது.

நேற்று நடந்த வாக்குப்பதிவின்போது, சிவசேனாவின் சுகாஸ் காண்டே, காங்கிரஸ் மந்திரி யஷோமதி தாக்குர், தேசியவாத காங்கிரஸ் மந்திரி ஜித்தேந்திர அவாத் வாக்களித்தபோது விதிகளை மீறியதாக பா.ஜனதா ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் அரியானாவில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் யாருக்கு ஓட்டுபோட்டோம் என்பதை அனைவரிடமும் காட்டினர். இது தேர்தல் விதிமீறல் என்று கூறி பா.ஜ.க. சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் கிரிஷன் லால் பன்வார் மற்றும் பாஜக-ஜேஜேபி ஆதரவு சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் அஜய்மகன் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் கிரிஷன் லால் பன்வார் மற்றும் பாஜக-ஜேஜேபி ஆதரவு சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோருக்கு அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story