பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஜே.பி.நட்டா கவனிக்கவில்லையா? - சித்தராமையா கேள்வி
பெலகாவி சம்பவத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதோடு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இளைஞரின் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார், அந்த வீட்டை அடித்து சேதப்படுத்தியதோடு, இளைஞரின் 42 வயதான தாயாரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று, மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிராமத்தில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, அங்கு 2 கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே பெலகாவி சம்பவத்திற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளதாவது;
"கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அதை மறந்துவிட்டு எங்களை அரசியல் ரீதியாக குறிவைத்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, சமீபத்தில் பெலகாவியில் நடந்த ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை சம்பவத்தை அவர் அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.
பெலகாவியில் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது.
பெலகாவி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், நமது உள்துறை மந்திரி டாக்டர் ஜி.பரமேஸ்வரா மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லக்ஷ்மி ஹெப்பால்கர் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் இழப்பீடும் வழங்கினர். போலீசார் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை நான் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
மாநில பா.ஜ.க. தலைவர்களும் மாநில அரசின் நடவடிக்கைகளால் திருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும், நட்டாவின் திடீர் விழிப்பும், சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கைக் கிளற அவர் முயற்சித்ததும் பெண்கள் மீதான உண்மையான அக்கறையைக் காட்டிலும், அரசியல் உள்நோக்கத்தையே குறிக்கிறது.
நட்டா பெண்களின் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை பாதுகாக்கத் தவறிய முந்தைய பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்திருப்பார். தேசிய குற்றப்பிரிவு (NCRB) அறிக்கையின்படி, கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ஆண்டு (2022) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 17,813 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் (2021) 14,468 வழக்குகள் பதிவாகியுள்ளன. அப்போது பா.ஜ.க. தேசிய தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இவர்களது ஆட்சியில் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை அவர் கவனிக்கவில்லையா?
மணிப்பூர் முதல் குஜராத் வரை, உத்தர பிரதேசம் முதல் மத்திய பிரதேசம் வரை, பா.ஜ.க. எங்கு ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக என்.சி.ஆர்.பி. தெரிவித்துள்ளது. பா.ஜ.க. இயல்பிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதை இந்த வழக்குகள் நிரூபிக்கின்றன.
மாநில பா.ஜ.க.விற்குள் உள்ள உட்கட்சி பூசல்கள் அக்கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நட்டாவுக்கு தைரியமும் அதிகாரமும் இருந்தால், இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும்."
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.