பக்கத்துவீட்டு சிறுமியை கடித்த செல்லப்பிராணி நாய் - உரிமையாளர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த கோர்ட்டு
சிறுமியை செல்லப்பிராணி நாய் கடித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
டெல்லி,
டெல்லியின் ஜகத்புரி பகுதியில் சேர்ந்தவர் தனது வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த செல்லப்பிராணி நாய் பக்கத்து வீட்டு சிறுமியை கடித்துள்ளது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் தாயார் செல்லப்பிராணி நாயின் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி அந்த நபர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 வீட்டாரும் 20 ஆண்டுகளாக அருகருகே வசித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இரு தரப்பும் பேசி சமாதானம் ஆகிவிட்டதாக சிறுமியின் தாயாரும், செல்லப்பிராணி நாயின் உரிமையாளரும் கோர்ட்டில் தெரிவித்தனர்.
மேலும், தனது செல்லப்பிராணி நாயை கவனமாக பராமரித்து வருவதாகவும், இரு தரப்பும் சமாதானமான பின்னும் தன் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதால் அதை ரத்து செய்யும்படியும் செல்லப்பிராணி நாயின் உரிமையாளர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நாயின் உரிமையாளர் 20 ஆயிரம் ரூபாயை வழக்கறிஞர் நல நிதியில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.