கொரோனாவை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - மத்திய சுகாதார மந்திரி உத்தரவு


கொரோனாவை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - மத்திய சுகாதார மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2022 11:00 PM GMT (Updated: 23 Jun 2022 11:18 PM GMT)

தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார மந்திரி உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. சில மாநிலங்களில், தொற்று அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம்.

இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், அதிகாரிகளும், நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால், உலக அளவில் கொரோனா நிலவரம் குறித்தும், இந்திய அளவில் பாதிப்பு மற்றும் இறப்பு நிலவரம், பரிசோதனை விவரம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில், அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா நிறைய வழிகாட்டுதல்களை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-

நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாவட்டங்களில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்.

நிலைமையை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். கால நிர்ணயம் செய்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

கொரோனா உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. இதை கண்டறிய மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவதை கண்காணித்து வர வேண்டும்.

அதே சமயத்தில், பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்க வேண்டும்.

போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசிகளை வீணாக்கக்கூடாது. நோய் அபாயம் உள்ளவர்களுக்கும், தகுதியுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story