'சுகாதார நிபுணர்கள் கிராமங்களில் சேவையாற்ற வேண்டும்' மத்திய சுகாதார மந்திரி அறிவுறுத்தல்


சுகாதார நிபுணர்கள் கிராமங்களில் சேவையாற்ற வேண்டும் மத்திய சுகாதார மந்திரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 July 2023 7:15 PM GMT (Updated: 14 July 2023 7:16 PM GMT)

மருத்துவ நிபுணர்கள் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் சேவையாற்ற வேண்டும்.

ரிஷிகேஷ்,

சுகாதார நிபுணர்கள் கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் சேவையாற்ற வேண்டும் என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்வி நிறுவனத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பட்டமளித்து பேசிய அவர், இந்தியாவில் மருத்துவம் என்பது வர்த்தகம் அல்ல, சேவை என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

நமது நாட்டில் டாக்டர்களை கடவுளின் தூதராக மக்கள் பார்க்கிறார்கள். எங்கள் டாக்டர்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.

ஆரோக்கியமான சமுதாயம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறது என்பதை வலியுறுத்துவதன் மூலம், நமது பொறுப்புணர்வு மனித குலத்துக்கான நமது சேவையுடன் ஒத்துப்போக வேண்டும்.

மருத்துவ நிபுணர்கள் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் சேவையாற்ற வேண்டும். மருத்துவ விஞ்ஞானம் கொண்டு வரும் சேவை மற்றும் பொறுப்பின் வாய்ப்பை முழு மனதுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தியா தனது சொந்த சுகாதார மாதிரியை உருவாக்க வேண்டும். இது இந்திய மரபியல் மற்றும் அதன் புவியியலுடன் தொடர்புடைய நோய்களின் கண்ட வடிவங்களுடன் இணைந்துள்ளது,

இந்திய மருத்துவ கல்வி அமைப்பு மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அங்கு 150 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். அத்துடன் மருத்துவ இதழ், நிறுவனத்துக்கான கீதம் ஆகியவற்றையும் மாண்டவியா வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார், உத்தரகாண்ட் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக டேராடூனில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சைப்பிரிவு, கேத் லேப் உள்ளிட்ட பிரிவுகளையும் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

இதற்கிடையே சுகாதாரத்துறைக்கான நாடாளுமன்றக்குழு கூட்டம் டேராடூனில் நடந்தது. மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இணை மந்திரிகள் பாரதி பிரவின் பவார், எஸ்.பி.பாகேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் குறித்தும், பொது சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களை வலுவாக செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் இயக்குனர் டாக்டர் ராஜீவ் பால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


Next Story