நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் எதிரொலி: கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகப்பு
நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் முஸ்லிம் தலைவர்களுடன், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெங்களூரு: நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் முஸ்லிம் தலைவர்களுடன், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நிபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக டெல்லி, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் உள்பட நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.
இதேபோல், கர்நாடகத்திலும் நேற்று முன்தினம் நுபுர் சர்மாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வடமாநிலங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு
இதையடுத்து, கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், பதற்றமான பகுதிகளில் நேற்று பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதாவது, 13 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், 18 பிளட்டூன் நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசும் எந்திரங்களும் வரவழைக்கப்பட்டன. பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் போலீசாருடன் உயர் போலீஸ் அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மத்திய உள்துறை எச்சரிக்கை
நுபுர் சர்மா விவகாரத்தை கையில் எடுத்து சில சமூக விரோதிகள் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய உள்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று முன்தினம் பெங்களூருவில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அப்போது கர்நாடகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து பெங்களூரு, மைசூரு, கலபுரகி, உடுப்பி, மங்களூரு, சிவமொக்கா, தாவணகெரே உள்பட மாநிலம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அமைதி பேச்சு
இதற்கிடையே, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவின் பேரில், பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுடன் நேற்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடகத்தில் அசம்பாவிதங்கள் நடக்கவில்லை- மந்திரி அரக ஞானேந்திரா
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'ஒரு சமுதாயத்தினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதன்படி மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து அமைதி பேச்சு நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எந்த தடையும் இல்லை. சில மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. கர்நாடகத்தில் அதுபோன்று எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை' என்றார்.