சிவமொக்காவில் கனமழை: மின்னல் தாக்கி பெண் பலி
சிவமொக்காவில் கனமழை பெய்தது. மின்னல் தாக்கி பெண் பலியானார். மேலும் தென்னை மரம் விழுந்து கார் சேதம் அடைந்தது.
சிவமொக்கா-
சிவமொக்காவில் கனமழை பெய்தது. மின்னல் தாக்கி பெண் பலியானார். மேலும் தென்னை மரம் விழுந்து கார் சேதம் அடைந்தது.
சிவமொக்காவில் கனமழை
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சிவமொக்கா டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் சாலைகளில் ஆறு போல் மழைநீர் ஓடியதால் வாகன ஓட்டிகள், அவ்வழியாக சென்றவர்கள் அவதி அடைந்தனர். மேலும் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை பெய்ததால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
பெண் பலி
இந்தநிலையில் சிவமொக்கா டவுன் பொம்மன கட்டே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை காற்றில் பறந்தன.
இதேபோல் சோமினகொப்பா அருகே உள்ள ஆஸ்ரயா வீட்டு பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமிபாய் (வயது28). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் லட்சுமிபாய் ஆடுகளுக்கு வாழை இலை பறிக்க சென்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கார் சேதம்
சிவமொக்கா டவுன் பகுதியில் வீட்டின் முன்பு இருந்த தென்னை மரங்கள் முறிந்து காரின் மீது விழுந்தன. இதனால் கார் சேதம் அடைந்தது. இதேப்போல் சிவமொக்கா ஜெயில் சாலையில் உள்ள தெய்வக்ஞா திருமண மண்டபம் பின்புறம் உள்ள மருந்து கடைக்காரர் வீட்டில் இருந்த 40 அடி உயரமுள்ள தென்னை மரம் வேருடன் சாய்ந்து வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டின் முன்பு யாரும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. நேற்றும் சிவமொக்கா டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிக்குள்ளாகி உள்ளனர்.