கடலோர மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அங்கு மேலும் 2 நாட்களுக்கு ‘மஞ்சள் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களூரு-
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அங்கு மேலும் 2 நாட்களுக்கு 'மஞ்சள் அலா்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் வெயில்
கர்நாடகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனாலும் இந்த கோடை வெயிலுக்கு மத்தியில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதேபோல், கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.
பலத்த மழை
மங்களூரு நகரில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியத்திற்கு பிறகு அதிவேக காற்று வீசியது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் இருந்தது. இதையடுத்து மாலையில் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
பெல்தங்கடி மற்றும் பண்ட்வால் தாலுகாக்களிலும் கனமழை கொட்டியது. தர்மதஸ்தலா அருகே ஜோடுமார்கா பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணா என்பவரின் வீட்டின் மேற்கூரை பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்து சென்றது. ேமலும் வீடும் சேதமடைந்தது.
மேலும் மத்தடுக்கா பகுதியில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் ராட்சத மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. மேலும் பெல்தங்கடி பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
உடுப்பி
இதேபோல் உடுப்பி மாவட்டத்திலும் உடுப்பி, கார்கலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக உடுப்பியில் பல இடங்களில் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இணைய வசதி கிடைக்காமல் மக்கள் திண்டாடினர்.
மேலும் அரபிக்கடலிலும் அலை சீற்றம் அதிகமாக இருந்தது. கடலோர மாவட்டங்களில் கொட்டி வரும் கோடை மழையால் மக்கள் அவதிக்குள்ளாகினார்கள்.
'மஞ்சள் அலர்ட்'
கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.