கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் நாளை மறுநாள் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களூரு-
கர்நாடகத்தில் நாளை மறுநாள் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கத்ரி வெயில் தாக்கம்
கர்நாடகத்தில் இந்த முறை கத்ரி வெயில் பொதுமக்களை அதிகளவு பாதித்தது. வெளியே நடமாட முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கத்திரி வெயில் முடிந்தது. வழக்கமாக இந்த கத்ரி வெயில் முடிந்த பின்னர் கர்நாடகத்தில் தென் மேற்கு பருவமழை பெய்யும். குறிப்பாக இந்த தென் மேற்கு பருவ மழை மே மாதம் இறுதியில் பெய்யும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு மே மாதம் கடந்தும் தென் மேற்கு பருவ மழை தொடங்கவில்லை. அடுத்த வாரத்தில் பெய்யும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்ரி வெயில் முடிந்தாலும், அதன் தாக்கம் இன்னும் மக்களிடம் இருந்து கொண்டுதான் இருப்பதாக கூறப்படுகிறது.
7-ந் தேதி பருவ மழை தொடக்கம்
இந்த நிலையில் கர்நாடக வானிலை ஆய்வு மையம், அடுத்த சில நாட்களில் கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழையால் வருகிற 7-ந் தேதி (நாளை மறுநாள்) கடலோரம் மற்றும் மலை நாடு மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானிலை மையத்தின் இந்த தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளும் தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தட்சிண கன்னடாவில் சில இடங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் இந்த தென்மேற்கு பருவமழை, மக்களுக்கு கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்சினையும் தீரும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.