பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் சிக்கியது
x

எத்தியோபியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி ஹெராயின் பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கியது. இதுதொடர்பாக தெலுங்கானா நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பயணிகளிடம் சோதனை

எத்தியோபியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தி இருந்தனர். அப்போது ஒரு பயணியின் பையில் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பயணியை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 45 வயது பயணி என்பது தெரியவந்தது. ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ரூ.100 கோடி மதிப்பு

அந்த பயணி வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிஸ் அபாபாவுக்கு சென்று இருந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அப்போது அந்த பயணிக்கும், போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த பயணியிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 14 கிலோ ஹெராயினை போதைப்பொருள் கும்பல் கொடுத்து அனுப்பி உள்ளது.

அந்த ஹெராயினை டெல்லியை சேர்ந்த ஒருவரிடம் கொடுக்கவும் பயணியிடம் அந்த கும்பல் கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் அந்த பயணி யாரிடம் கொடுக்க ஹெராயின் கடத்தி வந்தார் என்றும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி முதல் இதுவரை 8 வழக்குகளில் வருவாய் நுண்ணறிவு பிரிவினர் ரூ.250 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story