சீன புதிய வரைபட விவகாரம்: பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
லடாக்கில் ஒரு அங்குலம் நிலம் கூட இழக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறியது வடிகட்டின பொய் என ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
சீனா தனது எல்லையையொட்டிய இந்தியாவின் பல பகுதிகளை தனக்குச் சொந்தமானதாக உரிமை கொண்டாடிவருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அருணாசலபிரதேசத்தை தங்கள் நாட்டின் தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது. அதுதொடர்பான அத்துமீறல் செயல்களிலும் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், அருணாசலபிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா சூட்டியது. அதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.
இந்த நிலையில், அருணாசலபிரதேச மாநிலம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதிகளை இணைத்து சீனாவின் புதிய வரைபடத்தை அந்த நாடு நேற்று முன்தினம் வெளியிட்டது. தனிநாடான தைவான் மற்றும் பிரச்சினைக்குரிய தென்சீனக் கடல் பகுதி தீவுகளும் புதிய வரைபடத்தில் சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
சீனாவின் நில அளவை மற்றும் வரைபட தயாரிப்பு விளம்பர தின கொண்டாட்டத்தையொட்டி இந்த வரைபடத்தை அந்நாட்டு இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், 'அருணாசலபிரதேசத்தை இணைத்து சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டிருப்பது, எல்லை விவகாரத்தை மேலும் சிக்கலாக்கவே செய்யும். இதுதொடர்பாக, சீனாவுக்கு ராஜதந்திர வழிகளில் நாம் நமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்' என்றார்.
அருணாச்சல பிரதேசம் மற்றும் ஆக்கிரமித்துள்ள அகாஷி சின் பகுதிகளை தன் நாட்டின் ஒரு பகுதியாக காட்டும் புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. இது குறித்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி கூறியதாவது:
லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட இழக்கப்படவில்லை என்று பிரதமர் கூறியது முற்றிலும் வடிகட்டின பொய். பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். லடாக்கில் சீனா எல்லை மீறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு முக்கிய பிரச்சினை. பிரதமர் இது குறித்து வாய் திறக்க வேண்டும். இந்த வரைபடப் பிரச்சினை மிகவும் தீவிரமானது.
இவ்வாறு அவர் கூறினார்.