பணி நியமன முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை; காங்கிரஸ் வலியுறுத்தல்
பணி நியமன முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல் உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் பிரதீப் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். சமூக வலைத்தள ஒப்பந்தம் தொடர்பாக அவரை அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. இதில் இன்னும் அதிகளவில் பேரம் நடந்திருக்கும். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஆனால் அரவிந்த் லிம்பாவளியிடம் போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை.
கர்நாடக மின்சார கழக பணி நியமன தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டை போல் இதிலும் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முக்கிய நபர்களை விட்டுவிட்டு அடிமட்டத்தில் உள்ளவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பணி நியமன முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்களை இந்த அரசு பாதுகாக்கிறது. பா.ஜனதா தனது ஊழல்கள், தோல்விகளை மூடிமறைக்க மதக்கலவரங்களை பயன்படுத்துகிறது. வேலை வாய்ப்பு, வளர்ச்சி, கல்வி போன்றவை பா.ஜனதாவுக்கு சிறிய விஷயங்கள்.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.