இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்: போட்டி வேட்பாளர்களால் பா.ஜ.க.வும் காங்கிரசும் திணறல் - ஜெயிக்கப்போவது யார்?


இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்: போட்டி வேட்பாளர்களால் பா.ஜ.க.வும் காங்கிரசும் திணறல் - ஜெயிக்கப்போவது யார்?
x

சிம்லா,

இமாசலபிரதேச சட்டசபை தேர்தலில் அதிருப்தியாளர்களால் பா.ஜ.க.வும், காங்கிரசும் திணறுகின்றன. வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற இமாசலபிரதேச மாநிலத்தில், 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

தொடர்ந்து 2-வது முறை வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க. போராடுகிறது. கடந்த முறை இழந்த ஆட்சியை இந்த முறை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறது.

ஆனால் இரு கட்சிகளுக்கும் அதிருப்தி வேட்பாளர்கள் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறார்கள் என்பது சோதனைதான்.

காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாளர்கள் 12 தொகுதிகளில் களம் காணுகிறார்கள். ஆளும் பா.ஜ.க.விலோ 20 அதிருப்தியாளர்கள் களத்தில் உள்ளனர். கட்சியில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பா.ஜ.க., 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் துணைத்தலைவர் என 5 பேரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு இடை நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியும் கையைக் கட்டி நின்று விட வில்லை. முன்னாள் மந்திரி, முன்னாள் சபாநாயகர் என 6 பேர் மீது இடைநீக்க நடவடிக்கையை எடுத்து சாட்டையை சுழற்றி இருக்கிறது.

பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பாரம்பரியத்தை மீறுவதற்கு மக்களை எச்சரித்ததுடன், பா.ஜ.க.வுக்கு கதவுகளை அடையுங்கள் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனாலும் அதிருப்தி வேட்பாளர்கள்தான் பல இடங்களில் முடிவுகளை நிர்ணயிக்கிற நிலை இருக்கிறது.

பச்சாத், ஆனி, தியோக், சுலா, சபால், ஹமிர்பூர், அர்கி போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு 11 அதிருப்தியாளர்கள் சவாலாக நிற்கிறார்கள்.

இதே தொல்லை, ஆளும் கட்சிக்கு மட்டும் இல்லாமலா போய்விடும்? ஆளும் பா.ஜ.க.வுக்கு மண்டி, பிலாஸ்புர், கங்கரா, தர்மசாலா, ஜான்துடா, சம்பா, டேரா, குலு, ஹமிர்பூர், நலகார், பதேப்பூர், கின்னார், ஆனி, சுந்தர்நகர், நச்சான், இந்தோரா ஆகிய தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

* பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு தாவி பச்சாத் தொகுதியில் வேட்பாளராகி உள்ள தயாள் பியாரிக்கு, மந்திரியாக, சபாநாயகராக பதவி வகித்த காங்கிரஸ் தலைவர் கங்குராம் முசாபிர் சுயேச்சையாக களம் இறங்கி இருப்பது பெரும் சோதனையாக மாறி உள்ளது.

* சுல்லா தொகுதியில் காங்கிரஸ் கட்சி கபில் சபேகியாவை களம் காணச் செய்திருக்கிறது. காங்கிரஸ் டிக்கெட் மறுக்கப்பட்ட ஜெகஜீவன் பால் சுயேச்கையாக நின்று கொண்டு வரிந்து கட்டுகிறார். 2017 தேர்தலில் இதே தொகுதியில் இவர் பா.ஜ.க. வேட்பாளர் விபின் சிங் பர்மாரிடம் தோல்வியைத் தழுவினார். பா.ஜ.க. மீண்டும் விபின் சிங் பர்மாரையே நிறுத்தி உள்ளது.

* சிந்த்புர்ணி தொகுதியில் காங்கிரசின் பல்விந்தர் சிங்குக்கு அதிருப்தி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் குமார் நின்று தலைவலி கொடுத்து வருகிறார். பா.ஜ.க. தற்போதைய எம்.எல்.ஏ. பல்பீர் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

* சோபால் தொகுதியில் கடந்தமுறை வெற்றிவாய்ப்பை இழந்த காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் சந்த் மங்கலட்டே, அதிகாரபூர்வ வேட்பாளர் ரஜ்னிஷ் கிம்டாவை வலிமையுடன் எதிர்க்கிறார்.

* தியோக் தொகுதியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர் குல்தீப் சிங் ரத்தோருக்கு எதிராக விஜய் பால் கச்சி, இந்து வர்மான என 2 அதிருப்தியாளர்கள் வரிந்து கட்டுவது அவருக்கு பெருத்த சோதனையை தந்து வருகிறது.

* ஹமிர்பூர் தொகுதியில் காங்கிரசுக்கு ஆசிஷ் சர்மாவும், பா.ஜ.க.வுக்கு நரேஷ் தார்ஜியும் அதிருப்தி வேட்பாளர்கள். ஆனி தொகுதியில் இதே போன்று காங்கிரசுக்கு பரசுராமும், பா.ஜ.க.வுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோரி லாலும் அதிருப்தி வேட்பாளர்கள். அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் திகைத்து நிற்கிறார்கள்.

* முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் அர்கி தொகுதியில் அவரது வலதுகரமான ராஜிந்தர் தாக்குருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் போட்டி வேட்பாளர் ஆகி உள்ளார். இதேபோல் காங்கிரசுக்கு ஜோகிந்தர்நகரில் சஞ்சீவ் பண்டாரியும், ஜஸ்வன்பிரக்பூரில் முகேஷ் தாக்குரும் போட்டி வேட்பாளர்கள்.

* பா.ஜ.க.வில் அதிருப்தி வேட்பாளர்களாக கின்னார் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. தேஜ்வந்த் சிங்கும், இந்தோராவில் மனோகர் திமானும், ஆனியில் கிஷோர் லாலும், நலகாரில் கே.எல்.தாக்குரும், பதேப்பூரில் கிருபால் பர்மாரும் களத்தில் நின்று குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

* பஞ்சார் தொகுதியில் குலு அரச வம்சத்தை சேர்ந்தவரும், முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வர் சிங்கின் மகன் ஹிதேஷ்வர் சிங் போட்டி வேட்பாளர். சமீபத்தில் கட்சி தாவிய மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் கிமிராமை காங்கிரஸ் வேட்பாளர் ஆக்கி உள்ளது.

* தேரா தொகுதியில் சுயேச்சையாக கடந்த முறை வென்ற ஹோஷ்யார் சிங், பா.ஜ.க.வுக்கு தாவி இருந்தார். இந்த முறை அவர் பா.ஜ.க. அதிருப்தி வேட்பாளராக களம் காண்கிறார்.

* தர்மசாலா தொகுதியில் மாநில பா.ஜ.க. பழங்குடி பிரிவு தலைவர் விபின் நேரியாவும், குலுவில் ராம்சிங்கும் பா.ஜ.க. அதிருப்தி வேட்பாளர்கள்.

* மண்டி சதார் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி சுக்ராமின் மகன் அனில் சர்மாவுக்கு எதிராக பா.ஜ.க. அதிருப்தி வேட்பாளராக பிரவிண் குமார் சர்மா களம் காண்கிறார். பர்சார் தொகுதியில் சஞ்சீவ் சர்மாவும், ஜான்துடா தொகுதியில் ராஜ்குமார் காண்டலும், பிலாஸ்பூர் சதாரில் சுபாஷ் சர்மாவும் பா.ஜ.க. அதிருப்தி வேட்பாளர்கள் ஆவர்.

* சுந்தர் நகரில் மாநில முன்னாள் மந்திரி ரூப் சிங் தாக்குர், நச்சான் தொகுதியில் கியான் சந்த், ரோஹரு தொகுதியில் ராஜிந்தர் திர்தாவும் பா.ஜ.க. அதிருப்தி வேட்பாளர்களாக களம் காணுகிறார்கள்.

ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி, போட்டி வேட்பாளர்களால் கதி கலங்கி நிற்கின்றன. வெற்றி பெறப்போவது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களா, போட்டி வேட்பாளர்களா, ஆட்சியை பா.ஜ.க. தக்க வைக்குமா, காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்குமா என கேள்விகள் நீளுகின்றன.

இவற்றுக்கான பதில், டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது தெரிய வரும்.


Next Story