ஹிண்டன்பர்க் 2.0: மறைமுக வெளிநாட்டு முதலீடு..? புதிய குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு


ஹிண்டன்பர்க் 2.0: மறைமுக வெளிநாட்டு முதலீடு..? புதிய குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு
x
தினத்தந்தி 31 Aug 2023 8:00 AM GMT (Updated: 31 Aug 2023 9:37 AM GMT)

அதானி குழுமம் தொடர்பான 24 விவகாரங்களில் 22 விவகாரங்களின் மீதான விசாரணை நிறைவடைந்ததாக செபி கூறியுள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பங்குகளின் விலையை உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக வரிவிகிதம் மிக குறைவாக உள்ள நாடுகளில் போலி ஷெல் கம்பெனிகளைத் தொடங்கி அவற்றின் மூலமாக அதானி குழுமத்தில் முதலீடுகளை மேற்கொண்டு பங்கு மதிப்புகளை உயர்த்தியதாகவும், பிறகு வங்கிகளில் பெருமளவு கடன்களை வாங்கி முறைகேடான பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு புயலை கிளப்பிய நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தன. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏ.எம்.சப்ரே தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதே சமயம், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடமும் விசாரிக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் நியமித்த குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கையில் அதானி குழுமத்துக்குச் சாதகமாகவே முடிவுகள் வந்தன.

அதன்பின்னர் செபி தனது நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் அதானி குழுமம் தொடர்பான 24 விவகாரங்களில் 22 விவகாரங்களின் மீதான விசாரணை நிறைவடைந்ததாகக் கூறியுள்ளது. மேலும், அதானி குழுமம் சில முறைகேடுகள் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

செபியின் அறிக்கையை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கோள்ளப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதானி குழுமம் செய்த பல்வேறு பரிமாற்றங்களின் ஆதாரங்களை சேகரித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்ட அமைப்பு (OCCRP) தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக மறைமுக நிதியை பயன்படுத்தி இருவர் அதானி குழும பங்குகளை சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு வாங்கியுள்ளதாகவும், இது இரண்டு வழக்கில் தொடர்புடையாகவும் தெரிவித்துள்ளது.

அவர்கள் பெயர் நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சங்-லிங். இவர்கள் இருவரும் அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாக வர்த்தக தொடர்பில் இருந்துள்ளனர் என OCCRP அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் அடுத்த பதிப்பாக இந்த புதிய குற்றச்சாட்டும் இணைந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஜார்ஜ் சோரஸ் நிதி உதவியுடன் ஆதாரமற்ற ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை புதுப்பிக்கவும் மற்றும் அதானி குழுமத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் சில வெளிநாட்டு ஊடகங்களின் ஆதரவினால் புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளதாக அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் புதிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன.


Next Story