ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை குஷ்பு சேரியில் வசிக்கும் அவலம்..!


ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை  குஷ்பு சேரியில் வசிக்கும் அவலம்..!
x
தினத்தந்தி 27 May 2022 11:49 AM IST (Updated: 27 May 2022 11:52 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனையான குஷ்பு கான் சேரியில் வசித்து வருகிறார்.

போபால்,

இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணியில் கோல் கீப்பராக திகழும் வீராங்கனை குஷ்பு கான் (வயது 20). இவர் சேரியில் வசிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 2018-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனையான குஷ்பு கான் இன்றுவரை சேரியில் வசிக்கும் நிலையில் உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் குஷ்பு கான், விமானத்தில் பயணம் செய்து உலகின் பல்வேறு மூலைகளுக்கும் சென்று விளையாடினாலும் வீடு திரும்பியதும் சேரியில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருக்கு வீடு கட்டி தருவதாக பல்வேறு அதிகாரிகள் தொடர்ந்து வாக்குறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றவில்லை.

போபாலில் உள்ள ஆண் வீரர்களுடன் விளையாடி தனது ஆட்டத்தை மேம்படுத்திய குஷ்பு, 2017-ல் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடினார். இதுவரை பெல்ஜியம், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, தென் ஆப்ரிக்கா, பெலாரஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் அவர் விளையாடியுள்ளார். ஜூனியர் உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ளார்.

குஷ்புவுடன் பிறந்தவர்கள் 4 பேர். அவரது தந்தை ஷபீர் கான் (வயது 52) ஆட்டோ ஓட்டுகிறார். இதுகுறித்து ஷபீர் கான் கூறுகையில், 'என் மகள் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த அவள் விமானத்தில் பயணம் செய்கிறாள், பெரிய ஓட்டல்களில் தங்குகிறாள், ஆனால் அவள் வீடு திரும்பியதும், வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அவள் பழைய குடிசையில் தங்க வேண்டும்' இவ்வாறு கூறினார்.


Next Story