பரிசு தொகைக்காக போலி என்கவுண்ட்டர்...!! 29 ஆண்டுகளாக போராடி கணவர் மரணத்தில் நீதியை நிலைநாட்டிய மனைவி


பரிசு தொகைக்காக போலி என்கவுண்ட்டர்...!! 29 ஆண்டுகளாக போராடி கணவர் மரணத்தில் நீதியை நிலைநாட்டிய மனைவி
x

கணவரின் மரணத்தில் நீதி கிடைக்க தல்பீர் கவுர் போராடிய காலத்தில் அவருடைய மாமியார் மற்றும் மகனை இழந்து விட்டார்.

சண்டிகார்,

பஞ்சாப்பில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் காலா அப்கானா கிராமத்தில் வசித்து வந்தவர் சுக்பால் சிங். இவருடைய மனைவி தல்பீர் கவுர். 1994-ம் ஆண்டு, தேடப்பட்டு வந்த பயங்கரவாதி பண்டாலாவை என்கவுண்ட்டரில் கொன்று விட்டோம் என பஞ்சாப் போலீசார் கூறினர்.

ஆனால், என்கவுண்ட்டரில் சுக்பால் சிங் கொல்லப்பட்டார். பயங்கரவாதிக்கு தலைக்கு விதிக்கப்பட்ட பரிசு தொகைக்காக சிங்கை அழைத்து சென்று, போலி என்கவுண்ட்டரை நடத்தி கொலை செய்து விட்டனர் என்று கூறி அதே ஆண்டு ஜூலையில் சிங்கின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

அப்போது 19 வயது கொண்ட தல்பீர் 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால், 1998-ம் ஆண்டு பயங்கரவாதி என போலீசார் கூறிய பண்டாலா உயிருடன் பிடிபட்டார். இதனால், சிங்கின் தாயார் சிறைக்கு சென்று பண்டாலாவை சந்தித்து, மகன் சிங்கை பற்றிய தகவல் ஏதேனும் தெரியுமா? என கேட்டுள்ளார். அதில் பலனில்லை.

இதன்பின்னர், நீதி கேட்டு போராட்டம் தொடங்கியது. என்கவுண்ட்டர் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின்பு, 2007-ம் ஆண்டு கூடுதல் டி.ஜி.பி. ஜே.பி. வீரடி என்பவர் உத்தரவின்பேரில் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், 2010-ம் ஆண்டு வீரடி உயிரிழந்ததும், வழக்கு தொய்வடைந்தது.

எனினும், விடாமுயற்சியுடன் 2013-ம் ஆண்டு தல்பீர் கவுர், அரியானா ஐகோர்ட்டை அணுகினார். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரினார். அவருடைய இந்த வலியுறுத்தலுக்கு பின், பஞ்சாப் போலீசார் மற்றொரு விசாரணையை தொடங்கினர். கூடுதல் டி.ஜி.பி. சகோடா தலைமையில் விசாரணை தொடங்கியது. சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் பின்னர் அமைக்கப்பட்டது.

10 ஆண்டுகள் கழித்து, சுக்பால் சிங்கின் என்கவுண்ட்டர், உண்மையை மறைத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு நடந்த போலியான ஒன்று என ஐகோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சம்பவத்தின்போது பதவியில் இருந்த, முன்னாள் ஐ.ஜி. பரம்ராஜ் சிங் உம்ராநங்கல், துணை போலீஸ் சூப்பிரெண்டு ஜஸ்பல் சிங் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் குருதேவ் சிங் (உயிரிழந்து விட்டார்) ஆகியோருக்கு எதிராக கடந்த அக்டோபரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவானது. சாட்சிகளை அழிக்க முயன்றனர் என புதிய வழக்கு பதிவானது.

29 ஆண்டுகளுக்கு பின் கணவரின் மரணத்தில் இருந்த மர்மம் விலகியது. இதற்காக தல்பீர் போராடிய காலத்தில் அவருடைய மாமியார் மற்றும் மகனை இழந்து விட்டார். சுக்பால் சிங் கொல்லப்பட்டபோது, அவருடைய மகள் ஜீவன்ஜோத் கவுருக்கு 1 வயது. அவருக்கு தந்தையை பற்றிய எந்த நினைவும் இல்லை. ஒரு தந்தை இன்றி எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன் என நீங்களே நினைத்து பாருங்கள்.

அவரை பற்றி என்னிடம் எதுவும் கூறப்படவில்லை. என்ன நடந்தது என்பது பற்றி சிறிது காலத்திற்கு பின்னரே தெரிய வந்தது என அவர் கூறுகிறார். தல்பீர் கவுருக்கு 48 வயதில் அவருடைய கணவரின் மரணத்தில் நீதி கிடைத்துள்ளது.


Next Story