தேவேகவுடா தோல்விக்கு நான் காரணமில்லை


தேவேகவுடா தோல்விக்கு நான் காரணமில்லை
x

நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் தேவேகவுடா தோல்விக்கு நான் காரணமில்லை என்று பரமேஸ்வர் சொல்கிறார்

பெங்களூரு:-

கர்நாடகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில், துமகூருவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த தேவேகவுடா, நாடாளுமன்ற தேர்தலில் நான் தோல்வி அடைந்து கண்ணீர் சிந்தினேன். என்னை தோற்கடிக்க காரணமாக இருந்தவர்களும் கண்ணீர் சிந்துவார்கள் என்று தேவேகவுடா கூறி இருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் தேவேகவுடா தோல்வி அடைந்திருந்தார். அவரது தோல்விக்கு நான் காரணமில்லை. துமகூரு மாவட்டத்தில் நான் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கொரட்டகெரே தொகுதியில் தான் தேவேகவுடாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தது. தேவேகவுடா மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவரது வெற்றிக்காக நான் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் நேர்மையாக பணியாற்றினோம். அவர் கண்ணீருக்கு நான் காரணமில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருந்த தொகுதியில் இருந்து தான் தேவேகவுடாவுக்கு ஓட்டு வரவில்லை. இந்த விவகாரத்தில் தேவேகவுடாவின் கண்ணீருக்கு யார் காரணம் என்பதை, அவரே தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story