'நான் 2047-க்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்' - பிரதமர் மோடி
'நான் காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"நீங்கள் 2029-ல் சிக்கி இருக்கிறீர்கள். மோடி என்றால் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். நான் 2047-க்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கியுள்ளன.
முழு உலகமும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியா வேகமாக வளர்ச்சியடைகிறது. இந்தியாவை உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றுவதே இன்று தேசத்தின் மனநிலையாக உள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையில் நாடு உள்ளது. நான் தலைப்புச் செய்திகளுக்காக வேலை செய்பவன் இல்லை. காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.