குரல், புகைப்படம் பார்த்து பெண் என தெரிந்த பின்னரே வந்தேன்... ரேபிடோ பைக் ஓட்டுனரால் சர்ச்சை

ரேபிடோ பைக் ஓட்டுனர் ஒருவர், உங்களது குரல், புகைப்படம் பார்த்து பெண் என தெரிந்த பின்னரே சவாரிக்கு வந்தேன் என தெரிவித்தது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் ஓரிடத்தில் இருந்து விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு பொது போக்குவரத்து தவிர, தனியார் போக்குவரத்துக்காக டாக்சி, வேன் என பல வாகன சேவைகள் உள்ளன. இந்நிலையில், பைக் டாக்சி எனப்படும் வாடகை பைக்கில் கொண்டு சென்று ஆட்களை இறக்கி விடும் சேவையும் தொடர்கிறது.
இதன்படி ரேபிடோ என்ற நிறுவனத்தின் பைக் டாக்சி சேவையை பயன்படுத்த வேண்டி, இரவில் பெண் ஒருவர் அழைத்து உள்ளார். இதற்காக தனது இருப்பிடம் பற்றி வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஆனால் அதற்கு ரேபிடோ பைக் ஓட்டுனர், அந்த பெண்ணிடம் உங்களது குரல், புகைப்படம் பார்த்து பெண் என தெரிந்த பின்னரே சவாரிக்கு வந்தேன். வேறு யாரேனும் என்றால் நான் வந்திருக்கவே மாட்டேன் என பதிலுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் தனது டுவிட்டரில், தங்களுக்கு இடையே நடந்த சாட்டிங்கை, ஸ்கிரீன்ஷாட் படம் எடுத்து பகிர்ந்து உள்ளார்.
இந்த பதிவு வைரலான நிலையில், ரேபிடோ நிறுவனம் அளித்து உள்ள பதிலில், தொழில் முறையில் நடந்து கொள்ளும் விதம் பற்றி தெரியாத பைக் ஓட்டுனரை பற்றி அறிந்து நாங்கள் மிக வேதனை அடைந்து உள்ளோம்.
இதற்காக மன்னிப்பு கோருகிறோம். இந்த விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் மற்றும் பயண அடையாளத்திற்கான ஐ.டி. ஆகியவற்றை அனுப்ப முடியுமா? என்றும் கேட்டு உள்ளனர்.
இந்த விவகாரம், நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதற்காக பலரும், அந்த பெண்ணை பாராட்டி உள்ளனர். இதுபோன்று, உங்களது இருப்பிடம் பற்றி முன்பின் தெரியாத வழிபோக்கர்களிடம் தெரிவிக்கும் அனைத்து செயலிகளாலும் பிரச்சனையே பலருக்கும் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
இதேபோன்று மற்றொருவர், வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலம் நான் பொது போக்குவரத்து சேவையையே பயன்படுத்தி வருகிறேன் என தெரிவித்து உள்ளார்.






