'திரவுபதி முர்முவை விட பழங்குடியினருக்கு அதிகம் செய்துள்ளேன்' யஷ்வந்த் சின்கா பேட்டி


திரவுபதி முர்முவை விட பழங்குடியினருக்கு அதிகம் செய்துள்ளேன்  யஷ்வந்த் சின்கா பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2022 11:40 PM GMT (Updated: 24 Jun 2022 12:28 AM GMT)

இது முர்முவா, சின்காவா என்பதற்கான அடையாளம் பற்றிய கேள்வி அல்ல.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒடிசாவின் பழங்குடி இனத்தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில், வாஜ்பாய் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசில் நிதி, வெளியுறவு மந்திரி பதவி வகித்த யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் யஷ்வந்த் சின்கா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்த முறை ஜனாதிபதி தேர்தல் என்பது அடையாள போட்டி அல்ல, இது சித்தாந்தத்துக்கான போட்டி ஆகும். இது முர்முவா, சின்காவா என்பதற்கான அடையாளம் பற்றிய கேள்வி அல்ல.

நான் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க களத்தில் நிற்கிறேன். முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் என்ன செய்திருக்கிறார்? அவர் ஜார்கண்ட் கவர்னராக இருந்திருக்கிறார். அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததன் காரணமாக தானாகவே அந்த சமூகத்தின் பாதுகாவலராகி விட முடியாது. நான் நிதி மந்திரியாக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுகளை பாருங்கள். பழங்குடி சமூகத்தினருக்கு அதிகம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்காக, பெண்களுக்காக சிறப்பு ஒதுக்கீடுகள் செய்திருக்கிறேன். நான் பணியாற்றிய அரசின் கொள்கை அது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story