"நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்" - சோனியா பற்றி பிரியங்கா உருக்கம்


நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள் - சோனியா பற்றி பிரியங்கா உருக்கம்
x

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ள சோனியா காந்தி பற்றி அவரது மகள் பிரியங்கா, “நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்” என உருக்கமுடன் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ள சோனியா காந்தி பற்றி அவரது மகள் பிரியங்கா, "நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருக்கமுடன் கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார். மறு ஆண்டிலேயே கட்சியின் தலைவரானார். 2017-ம் ஆண்டு வரையில் அவர்தான் தலைவராக இருந்தார். அதன்பின்னர் அவர் மகன் ராகுல் காந்தி, கட்சிக்கு தலைவரானார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப்பொறுப்பேற்று அவர் பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும் சோனியாவே கட்சியின் இடைக்கால தலைவரானார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா என அந்தக் குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. முன்னாள் மத்திய மந்திரிகள் மல்லிகார்ஜூன கார்கேயும், சசி தரூரும் நேருக்கு நேர் மோதினர். இதில் மல்லிகார்ஜூன கார்கே வென்றார். நேற்று அவர் முறைப்படி கட்சியின் தலைவர் பதவியை ஏற்றார். அவரிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா ஒப்படைத்தார்.

அப்போது சோனியாவுக்கு நினைவுப்பரிசாக ராஜீவ் காந்தியின் 'பிரேம்' செய்யப்பட்ட புகைப்படத்தை மல்லிகார்ஜூன கார்கே வழங்கினார். அந்தப் படத்தைப் பெற்று சோனியா உயர்த்திப்பிடித்தபோது, கட்சித்தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதையொட்டி இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்தில் பிரியங்கா ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், " உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன் அம்மா. உலகம் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி, எனக்குத் தெரியும், நீங்கள் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருகி உள்ளார்.

அத்துடன் அவர் தனது தாய் சோனியா, தந்தை ராஜீவ் இருவருடைய படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அஜய் மக்கான் உருக்கம்

சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றதையொட்டி அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், " இந்த மகத்தான நாட்டின் மீது அவர் (சோனியா) கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பில் இருந்து அவர் தனது அரசியல் உத்வேகத்தைப் பெறுகிறார். மக்களும் அதே அன்பையும், நம்பிக்கையையும் அவருக்கு திரும்ப அளித்தனர்" என உருக்கமாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story