'இருவரையும் காதலிக்கிறேன்' - ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்...!
ஒரே நேரத்தில் இரு பெண்களை இளைஞர் திருமணம் செய்துகொண்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் லோதர்டாஹா மாவட்டம் பண்டா கிராமத்தை சேர்ந்த இளைஞர் சந்தீப் ஒரான். இவரும் அதேபகுதியை சேர்ந்த குஷன் என்ற பெண்ணும் ஒன்றாக லிவ் இன் முறையில் வாழ்ந்துவந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தையும் உள்ளது.
இதனிடையே, சந்தீப் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்குவங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த செங்கல் சூளையில் வேலை செய்துவந்த ஸ்வாதி குமாரி என்ற இளம்பெண்ணுடன் சந்தீப்பிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
வேலைக்கு பின் சொந்த ஊர் வந்தபின்னரும் ஸ்வாதிக்கும் , சந்தீப்பிற்கும் இடையே பழக்கம் நீடித்துவந்துள்ளது. இதற்கு கிராமத்தினர் மற்றும் குஷன் மற்றும் ஸ்வாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்தில் ஊர் தலைவர்களால் விசாரிக்கப்பட்டது. அப்போது, ஸ்வாதியும், குஷனும் தாங்கள் சந்தீப்பை காதலிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், சந்தீப்பும் தான் இருவரையும் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, இருவரும் காதலிப்பதால் ஸ்வாதி மற்றும் குஷன் ஆகிய இருவரையும் சந்தீப் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென பஞ்சாயத்து தீர்மானித்தது. இருவரையும் சந்தீப் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென பஞ்சாயத்தின் தீர்ப்பை இரு பெண்களின் குடும்பத்தினரும் எதிர்க்கவில்லை.
இதனை தொடர்ந்து, லிவ் இன் முறை வாழ்ந்துவந்த முதல்காதலி குஷனையும், செங்கல் சூளையில் காதலில் விழுந்த ஸ்வாதியையும் ஒரேநேரத்தில் கிராமத்தினர் முன்னிலையில் சந்தீப் நேற்று திருமணம் செய்துகொண்டார்.
2 பெண்களை திருமணம் செய்துகொண்டது தொடர்பாக சந்தீப் கூறுகையில், இரு பெண்களை திருமணம் செய்துகொள்வது சட்டரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆனால், நான் இருவரையும் காதலிக்கிறேன். இருவரையும் என்னால் விட முடியாது' என்றார்.