சக்திதாமா இல்லத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன்; மைசூருவில் நடிகர் விஷால் பேட்டி


சக்திதாமா இல்லத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன்;  மைசூருவில் நடிகர் விஷால் பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)

மைசூரு சக்திதாமா இல்லத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மைசூரு:

லத்தி படம் டிரெய்லர் வெளியீடு

மைசூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகர் விஷால் நடித்துள்ள 'லத்தி' படத்தின் கன்னட டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் விஷால் கலந்துகொண்டு டிரெய்லரை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படம் 'லத்தி'. இது ஆக்‌ஷன் படமாகும். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது. வருகிற 22-ந்தேதி தமிழ், கன்னடம், ெதலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் படம் வெளியாகிறது. இந்தியில் டப்பிங் பணி நடந்து வருகிறது. இதனால் இந்தியில் வருகிற 31-ந்தேதி லத்தி படம் வெளியாகும்.

கன்னட மொழியில்...

எனது படம் கன்னடத்தில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இந்த படம் வெற்றி பெற்றால் கன்னடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன். கர்நாடக தமிழ் மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். எனது தாய் தெலுங்கு மொழியை சேர்ந்தவர். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். நான் கன்னட மொழி படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம்.

மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக இந்த படத்தை கன்னடத்தில் வெளியிடுகிறோம். கன்னட மக்கள் இந்த படத்தை பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும். தியேட்டர்களில் செல்போன்கள் மூலம் படம் எடுப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்மதிக்கவில்லை

புனித்ராஜ்குமாரின் சக்திதாமா இல்லத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன். தற்போது அந்த இல்லத்தை சிவராஜ்குமார் குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளின் படிப்புக்காக என்ன செலவு வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன். அந்த இல்லத்தை காப்பாற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம். சிவராஜ்குமார் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளேன்.

சக்திதாமா இல்லத்தை எனது பொறுப்பில் எடுத்து கவனிக்க சிவராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் ஆலோசனை நடத்தினேன். ஆனால் அந்த இல்லத்தை எனது பொறுப்பில் ஒப்படைக்க சம்மதிக்கவில்லை. அவர்களே நிர்வகிப்பதாக தெரிவித்தனர். புனித் ராஜ்குமாரின் பெயரிலேயே அந்த இல்லம் இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story