மே.வங்கத்திலிருந்து புறப்பட்ட ரெயில் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.. மம்தா பானர்ஜி
தலைமைச் செயலாளர், பிற மூத்த அதிகாரிகளுடன் நிலைமையை கண்காணித்து வருவதாக மேற்கு வங்க முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரம்ண்டல் விரைவு ரெயில் ஒடிசா அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ரெயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக மேற்கு வங்க முதல் மந்திரி மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது;
மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து வருகிறோம்.
எங்களின் அவசரகால கட்டுப்பாட்டு அறை என்கள் 033- 22143526/ 22535185 செயல்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு, மீட்பு, உதவி மற்றும் உதவிக்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஒடிசா அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் 5-6 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறோம். நான், தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நேரில் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.