எனது தந்தை முதல்-மந்திரியானால் மகிழ்ச்சி அடைவேன்
தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது தந்தைக்காக தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறேன். எனது தந்தை முதல்-மந்திரியானால் மகிழ்ச்சி என்று யதீந்திரா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் அடுத்த முதல்-மந்திரி யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் இன்னும் முதல்-மந்திரி வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. இருப்பினும் பசவராஜ் பொம்மை தலைமையில் இந்த தேர்தலை பா.ஜனதா சந்திக்கிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் குமாரசாமி முதல்-மந்திரி வேட்பாளராக களத்தில் உள்ளார். ஆனால் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்வாகலாம் என தெரிகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் வருணா தொகுதியை சித்தராமையா தேர்வு செய்துள்ளார். அந்த தொகுதியில் அவரது மகன் யதீந்திரா எம்.எல்.ஏ.வாக உள்ளார். மகனுக்காக கடந்த முறை வருணா தொகுதியை சித்தராமையா விட்டு கொடுத்திருந்தார். தற்போது தந்தைக்காக வருணா தொகுதியை யதீந்திரா விட்டு கொடுத்துள்ளார். இதுகுறித்து மண்டியாவில் யதீந்திரா கூறியதாவது:-
நான் இந்த சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. வருணா தொகுதியில் எனது தந்தை போட்டியிடுகிறார். இது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, தொகுதி மக்கள் கட்சி மேலிடத்தின் விருப்பம் ஆகும். வருணா காங்கிரசின் இரும்பு கோட்டை. விஜயேந்திரா உள்பட யார் நின்றாலும், எனது தந்தையை வீழ்த்த முடியாது. அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். ஏனென்றால் வருணா தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் செய்துள்ளோம். நான் போட்டியிடாவிட்டாலும், எனது தந்தை வெற்றி ெபற்றால்போதும், மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
நான் மட்டுமில்லை எந்த மகனும் தந்தை முதல்-மந்திரியானால் மகிழ்ச்சிதான் அடைவார்கள். அவருக்காக கடந்த ஜனவரி முதல் தேர்தல் பிரசாரம் ெசய்து வருகிறேன். தொடர்ந்து பிரசாரம் செய்வேன். நிச்சயம் அவரை வெற்றி பெற செய்வேன். இது மகனாக நான் அவருக்கு செய்யும் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.