'பசவராஜ் பொம்மையை எதிர்த்து போட்டியிடுவேன்'
- வினய் குல்கர்னி சொல்கிறார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் வினய் குல்கர்னி. இவர் தார்வார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வாகி பின்னர் சித்தராமையா தலைமையிலான மந்திரி சபையில் மந்திரியாக பணியாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இவர் தார்வார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் இவர் பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஹாவேரி மாவட்டத்துக்கு வந்த வினய் குல்கர்னி சவனூரில் உள்ள தொட்ட உனுசேமடத்திற்கு சென்று மடாதிபதிகளிடம் ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'சிக்காவி தொகுதியில் 100 சதவீதம் காங்கிரஸ் வெற்றிபெறும். ஆனால் நான் சிக்காவி தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு சுமார் 13 முதல் 14 பேர் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். அவர்களில் யாராவது ஒருவருக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்கும். எனக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை எதிர்ப்பு போட்டியிட விருப்பம். காங்கிரஸ் வாய்ப்பு அளித்தால் கண்டிப்பாக நான் பசவராஜ் பொம்மையை எதிர்த்து போட்டியிடுவேன். இதில் எனக்கு துளிகூட பயம் இல்லை' என்று கூறினார்.