கர்நாடகாவில் மாநில கட்சியின் ஆட்சியை அமர்த்துவேன்


கர்நாடகாவில் மாநில கட்சியின் ஆட்சியை அமர்த்துவேன்
x
தினத்தந்தி 29 Nov 2022 2:52 AM IST (Updated: 29 Nov 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, மாநில கட்சியின் ஆட்சியை அமர்த்துவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

கோலார் தங்கவயல்:-

ரத ஊர்வலம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகாவில் இருந்து சிக்பள்ளாப்பூருக்கு சென்ற ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பஞ்சரத்ன ரதயாத்திரை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி குமாசாரசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா குருடுமலையில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பஞ்சரத்ன ரத யாத்திரையை தொடங்கினேன். இந்த ரத யாத்திரையின் போது மழை என்றும் பாராமல் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ததால் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அப்படியிருந்தும் நான் ரத யாத்திரையை நிறுத்தவில்லை. எனக்கு எனது உடல் நலத்தை காட்டிலும் மாநில மக்களின் நலன்தான் முக்கியம். எனவே தான் நான் எனது உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் பஞ்சரத்ன ரத யாத்திரையில் கலந்து கொள்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

மாநிலத்தில் மாற்றம்...

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கானோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி குமாரசாமி முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தனர். அதை தொடர்ந்து குமாரசாமி பேசுகையில் 'கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் ஆட்சி நடத்தியுள்ளன. ஆனால், அதனால் மாநில மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெங்களூருவை தவிர்த்து வளர்ச்சி அடையாத நகரசபைகள், கிராமங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது குறிக்கோளாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story