'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வேண்டுமா...வேண்டாமா..? பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன..?


ஒரே நாடு, ஒரே தேர்தல்  வேண்டுமா...வேண்டாமா..? பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன..?
x
தினத்தந்தி 5 Sept 2023 4:24 PM IST (Updated: 5 Sept 2023 5:23 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இந்தக் குழு அளிக்கும். இந்த குழுவில் இடம்பெறுவதற்கான அழைப்பை காங்கிரஸ் மக்களவைக்குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிராகரித்துள்ளார்.

இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்தநிலையில், பிரபல தேர்தல் வியூக நிபுணரும், பிகார் அரசியலில் மாற்றத்தை கொண்டு வர களப் பணியாற்றி வருபவருமான பிரசாந்த் கிஷோர் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அதாவது, நல்ல நோக்கத்திற்காக செயல்படுத்தப்பட்டால் வரவேற்பேன். 17 - 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும் பேசுகையில், தேர்தல் செலவினங்கள் பெரிதும் குறையும் என்று கூறியுள்ளார்.

அடிக்கடி தேர்தல் என்று வந்துவிட்டால் அரசை நடத்துவது சிக்கலாகி விடும். இதற்காக நேரம் விரயம் ஏற்படும். எனவே ஒரே தேர்தலாக அமைந்து விட்டால் சிறப்பாக இருக்கும். மக்களும் ஒரே ஒரு முறை தீர்ப்பை எழுதி விடுவார்கள். அதேசமயம் ஒரே இரவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் சிக்கலாகி விடும். பாஜகவிற்கு எதிர்வினையாக கூட மாறலாம் என்று தெரிவித்துள்ளார்.


Next Story