பெயரை மாற்றுவதால் உரிமை மாறிவிடாது- சீனாவுக்கு ஜெய்சங்கர் பதிலடி


பெயரை மாற்றுவதால் உரிமை மாறிவிடாது- சீனாவுக்கு ஜெய்சங்கர் பதிலடி
x

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது தொடர்பாக ஜெய்சங்கர் பதிலளித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அம்மாநிலத்தில் எல்லைகளில் உள்ள பல பகுதிகளின் பெயர்களை சீன மொழியில் மாற்றி அறிவித்து வருகிறது. ஏற்கெனவே 2017ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023ல் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் வெளியிட்டது. தற்போது நான்காவதாக இந்தியா - சீனா எல்லையில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது. அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும். நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?. பெயர்களை மாற்றும் சீனாவின் செயல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாம் எல்லையில் நமது ராணுவத்தை குவித்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.


Next Story