சட்டவிரோத கல்குவாரிகளை முறைப்படுத்தினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் மந்திரி பேச்சு


சட்டவிரோத கல்குவாரிகளை முறைப்படுத்தினால்  அரசுக்கு வருவாய் கிடைக்கும் மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சட்ட விரோத கல்குவாரிகளை முறைப்படுத்தினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

பெங்களூரு-

கர்நாடகத்தில் சட்ட விரோத கல்குவாரிகளை முறைப்படுத்தினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று சட்டசபையில் வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

சட்டவிரோத கல்குவாரிகள்

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த கூட்டத்தொடரின் 10-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் எஸ்.டி.சோமசேகர், தனது தொகுதியான யஷ்வந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கல்குவாரி தொழில் செய்யப்படுவதாக புகார் கூறினார். அதற்கு வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பதிலளிக்கையில் கூறியதாவது:-

அரசுக்கு வருவாய்

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி தொழில்கள் நடப்பதை நான் பார்த்துள்ளேன். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது இதே பிரச்சினையை நான் எழுப்பினேன். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் அனுமதி பெற்று அதை மீறி நீண்ட பரப்பில் கல்குவாரி தொழில் செய்யப்படுகிறது. அவ்வாறு கல்குவாரி தொழில் செய்கிறவர்களுக்கு அதற்கான அபராதத்தை விதித்து அதை முறைப்படுத்திவிடலாம். அவ்வாறு செய்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

வெடி சத்தம் அதிகமாக இருப்பதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வெடி வைக்கப்படுவதாகவும் உறுப்பினர் கூறினார். அடுத்த வாரம் நான் யஷ்வந்தபுரம் தொகுதியில் உள்ள கல்குவாரிகளை நேரில் பார்வையிடுகிறேன். அதற்கு முன்பு சட்டவிரோத கல்குவாரி குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும்படி எனது துறை இயக்குனருக்கு உத்தரவிடுகிறேன். அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.



Next Story