'நேதாஜி இருந்திருந்தால் இந்தியா பிரிக்கப்பட்டிருக்காது' - அஜித் தோவல் பேச்சு


நேதாஜி இருந்திருந்தால் இந்தியா பிரிக்கப்பட்டிருக்காது - அஜித் தோவல் பேச்சு
x

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். மகாத்மா காந்திக்கு சவால் விடக்கூடிய துணிச்சல் நேதாஜிக்கு இருந்தது. மரியாதை காரணமாகவே அவர் மகாத்மா காந்தியின் வழியை தடுக்காமல் இருந்தார். எனினும், அதன்பிறகு, நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

நேதாஜி தடுப்புக்காவலில் இருந்தபோது, அவர் இந்தியாவிலிருந்து தப்பிக்க முடிவு செய்தார். ஆப்கானிஸ்தானின் உடையை அணிந்துகொண்டு அவர் காபூலுக்கு புறப்பட்டார். பின்னர் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் சென்றார். ஜெர்மனியில் அதிபர் அடால்ஃப் ஹிட்லரை சந்தித்து, அந்நாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட 4,000 இந்தியர்களை அவர் விடுதலை செய்தார். அதன்பின் அவர் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

நாட்டுக்கு நேதாஜி அளித்திருக்கும் பாரம்பரியம் இணையற்றது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது இந்தியா என்று அவர் நம்பினார். இந்தியாவுக்கு வலுவான பொருளாதார கட்டமைப்பு அவசியம் என்று அவர் கருதினார். நேதாஜி தீவிர மத நம்பிக்கை கொண்டவர். பகவத்கீதையை எப்போதும் தன்னுடன் எடுத்துச் செல்லக்கூடியவர். அவர், தனது பார்வையில் மதச்சார்பற்றவராக இருந்தார். ஆனால், உள்ளுக்குள் அவர் பக்தியுடன் இருந்தார். வரலாறு, அவர் விஷயத்தில் இரக்கமற்றதாக இருந்தது.

நேதாஜி இருந்திருந்தால் இந்தியா பிரிக்கப்பட்டிருக்காது. முழு சுதந்திரத்தைத் தவிர வேறு எதற்கும் நான் உடன்பட மாட்டேன் என்று அவர் கூறினார். நேதாஜி உருவாக்க விரும்பிய இந்தியாவை மீண்டும் உயிர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகளை மேற்கொள்கிறார். அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது."

இவ்வாறு அஜித் தோவல் தெரிவித்தார்.


Next Story