மத்திய அரசு இப்படி நடந்து கொண்டால் காஷ்மீர் மக்களின் துன்பம் இரட்டிப்பாகும் - அரவிந்த் கெஜ்ரிவால்
காஷ்மீரில் அதிகரித்துள்ள கொலைகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அதிகாரம் நீக்கப்பட்ட பின்பு சமீப நாட்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காஷ்மீரி பண்டிட்டுகள் இலக்காக கொல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த ஆசிரியை ரஜ்னி பாலா (வயது 36) சுட்டு கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் அதிகரித்துள்ள இந்த கொலைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் படுகொலைகளுக்கு டெல்லியின் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் பேசுகையில், " பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. மீண்டும் 1990 யுகம் வந்துவிட்டது. பாஜக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் எப்போதெல்லாம் கொலை நடந்தாலும், உள்துறை அமைச்சர் உயர்மட்டக் கூட்டத்தை அழைத்ததாகச் செய்தி வரும். இந்தக் கூட்டங்கள் போதும்.இப்போது நடவடிக்கை தேவை, காஷ்மீர் நடவடிக்கையை விரும்புகிறது.
காஷ்மீர் பண்டிட்கள் குறிவைக்கப்பட்ட கொலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும்போது, காஷ்மீரில் உள்ள தற்போதைய பாஜக அரசு அவர்களை போராட்டம் நடத்த அனுமதிப்பதில்லை. அரசு இப்படி நடந்து கொண்டால் மக்களின் துன்பம் இரட்டிப்பாகும்.