முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீட்டை வழங்கினால் எந்த சமுதாய இடஒதுக்கீட்டை குறைப்பீர்கள்?


முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீட்டை வழங்கினால் எந்த சமுதாய இடஒதுக்கீட்டை குறைப்பீர்கள்?
x

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு மீண்டும் தன் இடஒதுக்கீட்டை வழங்கினால், எந்த சமுதாய இட ஒதுக்கீட்டை குறைப்பீர்கள்? என்று காங்கிரசுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:-

ஓட்டு சேகரித்தார்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கா்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் விமானம் மூலம் மைசூருவுக்கு வந்தார். அங்கிருந்து சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டைக்கு வந்த அவர் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். அவர் திறந்த வாகனத்தில் சென்று 'ரோடு ஷோ' நடத்தி மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி இன்றும் கூட ஒரு சமூகத்தை ஈர்க்கும் அரசியலை செய்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் அரசு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. அந்த இட ஒதுக்கீட்டை பா.ஜனதா அரசு ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் தலித், பழங்குடியினர், ஒக்கலிகர், லிங்காயத் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இரட்டை என்ஜின் அரசு

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவதாக சொல்கிறது. அப்படி என்றால் யாருடைய இட ஒதுக்கீட்டை நீங்கள் குறைப்பீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை கேட்கிறேன். இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். ஒக்கலிகர், லிங்காயத்துகள் அல்லது தலித், பழங்குடியின சமூகங்களின் இட ஒதுக்கீட்டை நீங்கள் குறைப்பீர்களா?.

இந்த தேர்தல் பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலுக்கும், காங்கிரசின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஈர்க்கும் அரசியலுக்கும் இடையே நடக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். இதன் மூலம் தென்இந்தியாவில் எங்கள் கட்சியை பலப்படுத்துவோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இரட்டை என்ஜின் அரசு கர்நாடகத்தில் அமையும்.

பா.ஜனதா வெற்றி

பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக உழைத்து உள்ளார்கள். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

அமித்ஷா திறந்த பஸ்சில் ஊர்வலமாக வந்து ஓட்டு சேகரித்தபோது ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் வழிநெடுகிலும் கலந்து கொண்டு பிரதமர் மோடி, அமித்ஷாவை ஆதரித்து கோஷங்களை எழுப்பினர்.


Next Story