காங்கிரஸ் கட்சியை அவதூறாக பேசினால் நாடு வளர்ந்துவிடுமா?


காங்கிரஸ் கட்சியை அவதூறாக பேசினால் நாடு வளர்ந்துவிடுமா?
x

காங்கிரஸ் கட்சியை அவதூறாக பேசினால் நாடு வளர்ந்துவிடுமா? என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:-

சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கலபுரகியில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரசார் பலர் உயிர்த்தியாகம் செய்தனர். ஆனால் பா.ஜனதாவினர் என்ன செய்தனர்?. அந்த நேரத்தில் அரசு துறைகளில் உயர்ந்த பதவிகளை பெற்றனர். காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் என்ன செய்தது என்று பிரதமர் மோடி அடிக்கடி கேட்கிறார். நாங்கள் 70 ஆண்டுகளில் ஒன்றும் செய்யாமல் இருந்திருந்தால், நீங்கள் (மோடி) பிரதமராகி இருக்க முடியாது. நாங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்.

சம உரிமைகள்

மகாத்மா காந்தி தனது உயிரை பற்றி கவலைப்படாமல் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். காந்தியால் தான் காந்தி தொப்பி பிரபலமானது. நேரு சட்டை நேருவால் தான் பிரபலமானது. அதே போல் நீங்கள் (மோடி) அணியும் கோட்டு தான் பிரபலம். நீங்கள் ஒரு நாளைக்கு சிவப்பு, மஞ்சள், நீலம், காவி நிறம் என்று 4 கோட்டுகளை அணிகிறீர்கள். அது தற்போது மோடி கோட்டு என்று பிரபலம் அடைந்துள்ளது.

எங்கு சென்றாலும் மோடி மோடி என்று பேசுகிறீர்கள். நாட்டிற்கும், இந்த பகுதிக்கும் நல்லது செய்யுங்கள். காங்கிரசை மட்டும் அவதூறாக பேசிக்கொண்டிருந்தால் நாடு வளர்ந்து விடுமா?. அரசியல் சாசனம் எழுதும் பணியை அம்பேத்கரிடம் காங்கிரஸ் தான் ஒப்படைத்தது. அந்த அரசியல் சாசனம் வாக்குரிமை உள்பட அனைவருக்கும் சம உரிமைகள் வழங்குகின்றன. இன்று தலித், பழங்குடி, பின்தங்கிய பிரிவினர் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிறார்கள் என்றால் அதற்கு காங்கிரசால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் தான் காரணம்.

சேவை ஆற்றவில்லை

70 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமாகவில்லை. நாட்டின் சுதந்திரத்திற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்போ அல்லது பா.ஜனதா கட்சியோ எந்த சேவையும் ஆற்றவில்லை. மாறாக அவர்கள் ஆங்கிலேயே ஆட்சியில் பதவிகளை பெற்றனர். கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது இல்லை. ஏனெனில் பிரதமர் மோடியை சந்திக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. எம்.பி.க்களிடம் மோடி பேசுவது இல்லை. அவர் எம்.பி.க்களிடம் இருந்து விலகி இருக்கிறார்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.


Next Story