அவை நடவடிக்கைகளை புறக்கணித்து: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்


அவை நடவடிக்கைகளை புறக்கணித்து: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
x

அவை நடவடிக்கைகளை புறக்கணித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர், அவை நடவடிக்கைகளை புறக்கணித்து விட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் கூடினர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தேநீர் விருந்து புறக்கணிப்பு

அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சவுத்ரி இடைநீக்கத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மழைக்கால கூட்டத்தொடர் நிறைவையொட்டி, சபாநாயகர் ஓம்பிர்லா அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் அறிவித்தார். 23 கட்சிகளை சேர்ந்த 142 எம்.பி.க்கள் புறக்கணிப்பதாக அவர் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்

போராட்டத்தின்போது, மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

விதிகளை சுட்டிக்காட்டி, அற்ப காரணங்களுக்காக எம்.பி.க்களை நீக்குகிறார்கள். இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை.

உரிமை குழுவுக்கு பிரச்சினையை அனுப்புவதன் மூலம், அந்த எம்.பி., அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலோ, நிலைக்குழு கூட்டங்களிலோ கலந்து கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறுகையில், ''சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல இது பொருத்தமான விவகாரம்'' என்றார்.


Next Story