இந்தியாவில் நகர விமான போக்குவரத்து திட்டம் அமல்-மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தகவல்
மின்னணு வாகன புறப்பாடு மற்றும் தரையிறக்க வடிவத்தில் நகர விமான போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
பெங்களூரு:
உரிய அனுமதி
இந்தியா பவுண்டேசன் என்ற அமைப்பு சார்பில் 7-வது ஆண்டு மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
அமெரிக்காவில் நகர விமான போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதற்கான மின்னணு விமானம் பரிசோதனை அதன் விமானப்படையில் நடந்து வருகிறது. அது மின்னணு வாகன புறப்பாடு (டேக்ஆப்) மற்றும் தரை இறங்குதல் (லேண்டிங்) வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய விமான பரிசோதனை கனடா விமானப்படையில் நடந்து வருகிறது. அந்த பரிசோதனைக்கு உரிய அனுமதி கிடைத்ததும், இந்தியாவிலும் அதன் உற்பத்தி அனுமதிக்கப்படும்.
விமான நிலையங்கள்
இன்று ரோபோட்கள் இருப்பது போல் வரும் நாட்களில் இந்தியாவில் நகர விமான போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்படும். இதுகுறித்து அமெரிக்கா, கனடா நாட்டு நிறுவனங்களுடன்
ஏற்கனவே பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. அந்த தொழில்நுட்பம் முதலில் விமானப்படையில் பயன்படுத்தப்படும். அதில் எந்த சிக்கலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அதை பயணிகள் விமானத்துறையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு 74 விமான நிலையங்கள் இருந்தன. கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 67 விமான நிலையங்களை, துறைமுகங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளங்களை நிறுவியுள்ளோம். விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மேலும் 200 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் மற்றும் நீரில் விமானங்கள் இறங்கும் வசதியை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம். கடைகோடி வரை விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்பார்ப்பு நிறைவேறும்
வளர்ச்சி பெரிய மாநகரங்களில் இருந்து மட்டும் வராது. அதனால் நாங்கள் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களிலும் விமான நிலைய வசதியை ஏற்படுத்துகிறோம். கடல்சார் விமானங்கள், நீரில் தரையிறங்கும் விமானங்கள் போன்ற வசதிகளையும் உருவாக்குகிறோம். இதன் மூலம் கடைகோடிக்கும் விமான வசதி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா பேசினார்.