ஆவணங்களின்றி எடுத்து வந்த: ரூ.10¼ லட்சம் அரிசி மூட்டை, கியாஸ் அடுப்பு பறிமுதல்


ஆவணங்களின்றி எடுத்து வந்த: ரூ.10¼ லட்சம் அரிசி மூட்டை, கியாஸ் அடுப்பு பறிமுதல்
x

சிவமொக்காவில் ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.10¼ லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டை, கியாஸ் அடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவமொக்கா:-

தேர்தல் நடத்தை விதிமுறை

கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் பறக்கும் படை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார், கலால்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக தீர்த்தஹள்ளி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் ரூ.81 ஆயிரம் மதிப்பிலான 198 லிட்டர் மதுபானம் இருந்தது. இதற்கு முறையாக ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

அரிசி மூட்டைகள் பறிமுதல்

இதேபோல சிவமொக்கா டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சிவமொக்கா டவுன் பகுதியில் இருந்து தீர்த்தஹள்ளியை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது டிரைவர் அரிசி மூட்டைகள் இருப்பதாக கூறினார். இதையடுத்து போலீசார் அந்த அரிசி மூட்டைகள் எடுத்து செல்வதற்கான ஆவணங்களை கேட்டனர். அதற்கு டிரைவர் எந்த ஆவணமும் இல்லை என்று கூறினார். இதையடுத்து போலீசார் லாரியில் எடுத்து செல்ல முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான 23 டன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். லாரியையும் கைப்பற்றினர். இதேபோல சிவமொக்கா டவுன் பகுதியில் சரியாக ஆவணங்கள் இல்லாமல், சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 50 கியாஸ் அடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது மட்டுமின்றி, ரூ.95 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

ரூ.10¼ லட்சம் அரிசி மூட்டை...

இந்த அரிசி, மூட்டைகள், மதுபானங்கள், கியாஸ் அடுப்புகள், ரொக்கப்பணம் சேர்ந்து ரூ.10¼ லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகள், இந்த பொருட்கள் எதற்காக எடுத்து செல்லப்பட்டது. எங்கு எடுத்து ெசல்லப் பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story